lines
← Back to the February 2004 cover

Interviews · February 2004

Interview: V. Ananthasangari (in Tamil)

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரியை ‘லைன்ஸ்’ (வரிகள்); இணையத்தளத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான அகிலன் கதிர்காமர் 2004 ஜனவரியில் பேட்டி கண்டார். இப்பேட்டியானது வடக்குக் கிழக்கு பாராளுமன்ற ஜனநாயகத்தின் வரலாற்றையும் எதிர்காலத்தையும் ஆய்வு செய்யும் ஒரு முயற்ச்சியாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஏகபிரதிநிதித்துவக் கோரிக்கை தொடர்பாக எழுந்துள்ள விவாதத்தின் மையமாக திரு. ஆனந்தசங்கரி விளங்குகின்றார்

அகிலன்:

இது உங்களைப் பேட்டிகாணுவதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம். நீங்கள் உங்களது ஆரம்பகால உணர்வுபூர்வமான அரசியல் ஈடுபாடைப்பற்றிக் கூறமுடியுமா?

ஆனந்தசங்கரி:

எனது உணாவுபூர்வமான அரசியல் ஈடுபாடானது ஆரம்பகால பாடசாலைக்காலத்தில் தொடங்கியது. எனது பெற்றோர்கள் முற்போக்கானவர்களாக இருந்தபோதிலும் சாதி அமைப்பு அப்போது கடுமையானதாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியவேண்டும். எனவே பல சாதிகளைச்சேர்ந்த எல்லா மக்களுடனும் நான் பின்னிப்பிணைந்திருந்தேன், அவர்களை வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வருவேன் எனது பெற்றோர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள். எனது இளம்பருவத்திலிருந்து நான் ஒரு சோசலிஸ்டாக இருந்தேன் என்று கூறலாம். உங்களது பெற்றோர்கள் அல்லது மாமன்மார்களோ இந்த மாதிரியான சாதிவிடயத்தில் கடுமையானவர்களாக இருந்த அந்த நேரத்தில் எங்களைப்போன்றவர்கள் அருமையாகத்தான் இருந்தார்கள். இந்த சாதிப்பிரச்சனை என்னை ஒரு பரந்த எண்ணமுள்ள மனிதனாக ஆக்கியது என்று நான் நினைக்கிறேன். எனது தந்தை ஆசிரியராக இருந்தார். அவர் சாதி அடிப்டையில் எவருக்கும் எந்தப்பாதுபாட்டையும் காட்டுவதில்லை. அந்த நேரத்தில் சிறுபான்மை சாதியினருக்கு திறந்து விடப்படாத பாடசாலை ஒன்றுக்கு அவர் அதிபராக வந்தார். அவர் ஏனைய சாதியினருக்கு அந்த பாடசாலைலயத் திறந்து விட்டார். ஆனால் துரதிஸ்ட்டவசமாக யாருமே சமுகமளிக்கவில்லை. ஆனால் காலம் செல்ல பாடசாலைகளும் கோவில்களும் திறந்துவிடப்பட்டன. அந்த நேரத்தில் கிறிஸ்தவ பாடசாலைகள் இந்தமாதிரியான பாகுபாட்டினை காட்டவில்லை. யாழ்ப்பாணக்கல்லூரியை எடுத்துக்கொள்ளுங்கள், அது எல்லாச்சாதியினரையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் சில பாடசாலைகளின் அநேகமாக சுதேசமொழிப் பாடசாலைகளின் அதிபர் கடும்போக்குள்ளவராக இருந்தால் அல்லது அவர் அந்தப் பாடசாலை ஸ்தாபகரின் குலவழித்தோன்றலாக இருந்தால் திறந்துவிடமாட்டார்கள். இவ்வாறு தான் நான் ஒரு சோசலிஸ்டாக வந்தேன். நான் வறியவர்களின்மீது அநுதாபம் கொண்டவனாக இருந்தால் வறுமையும் ஒரு காரணியாக அமைந்தது. எனது வீட்டில் இடம்கொடுத்த தாழ்ந்தசாதியைச் சேர்ந்த நண்பர்களும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தனர். எங்கேயெல்லாம் சாத்தியமோ நான் சிறிய சிறிய உதவிகளைச் செய்தேன். எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் படிப்பதற்காக ஒருமுறை எனது அம்மா தனது கைவளையல்களைத் தந்தது எனக்கு நினைவிலுள்ளது. இதே மாதிரி நாங்கள் பணக்காரக் குடும்பமாக இல்லாதபோதும் நாங்கள் உதவிசெய்வதற்கு முயற்ச்சித்தோம்.

அகிலன்:

எப்படி நீங்கள் லங்கா சமசமாஜக்கட்சியில் இணைந்து கட்சி அரசியலுக்குள் நுழைந்தீர்கள்?

ஆனந்தசங்கரி:

நான் லங்கா சமசமாஜக்கட்சியில் இணைந்தபோது நான் பதினெட்டு வயது மாத்திரம் நிரம்பியவனாக இருந்தேன். எனது பாடசாலை நாட்களிலே என்னுடைய பாடசாலை சக மாணவர்கள் என்னைக் கம்யூனிஸ்ட் என அழைப்பது வழக்கமாக இருந்தது. அந்த நாட்களில் சோசலிஸ்ட் என்ற சொல்லை அவர்கள் பாவிப்பதில்லை. எனவே இந்த மாதிரித்தான் நான் முத்திரை குத்தப்பட்டேன். நான் முதன்முதலாக கொழும்புக்கு வந்த பொழுது கொட்டாஞ்சேனையை இருப்பிடமாகக் கொண்ட இளம் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். முதலில் விவியன் குணவர்த்தனா பின்னர் அவரது கணவர் அதன் பின் ஒவ்வொரு ஒவ்வொருத்தராக நான் சந்தித்தேன். நான் செயற்படவும் கொட்டாஞ்சேனை இளைஞர்கழகத்தின் தலைவராக தெரிவசெய்யப்பட்டேன் அந்தக்கட்டத்தில் லங்கா சமசமாஜக்கட்சியிலா அல்லது கம்யூனிஸ்ட் கட்சியிலா இணைவதென்று முன்னுரிமை எதனையும் நான் கொண்டிருக்கவில்லை, ஆனால் எனது அமைப்பு லங்கா சமசமாஜக்கட்சியின் இளைஞர்களுடன் இருந்தால் நான் அவர்களுடன் இணைந்தேன். அதன் பின்னர் ஹர்த்தால் வந்தது. இடைத்தேர்தலின் பிரச்சாரத்திற்காக நான் அடிக்கடி போனேன். நான் மேலும் மேலும் செயற்ப்பட்டேன்.

நான் கூறியபடி கொட்டாஞ்சேனை இளைஞர்களுடன் நான் நட்பாக இருந்தேன். 1959 இல் தேர்தல் வந்தபொழுது நான் போட்டியிடக் கேட்கப்பட்டேன். கொட்டாஞ்சேனை ஆசனத்திற்காக ஒரு நம்பிக்கையான வேட்பாளனாக இருந்தேன். ஆனால் பலவருடங்களாக அங்கேயிருந்த எனது நண்பர்களில் ஒருவர் போட்டயிடுவதற்கு விரும்பினார் எனவே அதற்கு நான் மனப்பூர்வமாக சம்மதித்தால் கொட்டாஞ்சேனை தெற்கு தொகுதிக்காக போட்டியிட வேண்டியிருந்தது. அது ஒரு சாதனையாக இருந்தது. நான் சுகதாசாவுடன் போட்டியிட வேண்டியிருந்தது. இவர் ஒரு கூடாதவர் என்றும் எனக்கு தீங்கிழைக்கலாம் எனவும் மக்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவர் அந்தளவிற்கு கூடாதவரில்லை. எப்படியோ நான் போட்டியிட்டேன். எனக்கு வாக்களிக்கவேண்டிய தமிழர்களில் கணிசமானோர் சுகதாசாவிற்கு வாக்களிக்களித்தனர். 1959 ஆண்டு மாநகரசபை தேர்தலுக்கு பின்னர் உடனடியாக பாராளுமன்ற தேர்தலுக்கு அழைப்பு விடப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த லங்கா சமசமாஜக்கட்சியின் அங்கத்தவர்களடங்டகிய குழுவொன்று என். எம். பெரேராவையும் கொல்வின் ஆர் டி சில்வாவையும் சந்தித்து அவர்களிடம்

தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் கிளிநொச்சிக்கு அனுப்பப்படவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர் எனவே என் எம் பெரேரா என்னை அழைத்து பாராளுமன்றத்திற்காக என்னை போட்டியிடுமாறு என்னிடம் கேடடுக்கொண்டார். அந்த நேரத்தில் நான் 26 வயது மாத்திரம் நிரம்பியவனாக இருந்தேன். எனவே நான் கூறினேன் ‘‘தோழரே எனக்கு கிளிநொச்சி எங்கேயிருக்கிறதெனத் தெரியாது நான் இப்பதான் அதனைக் கடந்து வந்து தேனீர் அருந்துவதற்காக முறிகண்டியில் தரித்தேன். ஆனால் அங்கே எனக்கு எவரையும் தெரியாது’’ என் எம் பெரேரா என்னிடம் என்ன கூறினார் என்பதையறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ‘‘நீங்கள் போங்கள் பத்து வருடத்தில் நீங்கள் ஆசனத்தை கைப்பற்றுவீர்கள்’’ என அவர் கூறினார்.

அந்த நேரத்தில் புதிதாக காடுகளை வெட்டித்திருத்தப்பட்ட கிளிநொச்சி தொகுதிக்கு பதினொருபேர் போட்டியிட்டார்கள். தேர்தலில் வென்ற வேட்பாளர்களுக்கு 2500 வாக்குகள் கிடைத்தன. நான் இடத்திற்கு புதிது, எனது நியமனத்திற்கு கையெழுதிதிட்ட ஆட்களை நான் வீதியில் சந்தித்தேன். ஆனால் எனக்கு 1000 வாக்குகள் வரையில் கிடைத்தது. ஒரு வாக்கினால் நான் கட்டுப்பணத்தை இழந்தேன். அதனால் ‘லங்கா சமசமாஜக்கட்சியின் வேட்பாளர் ஒரு வாக்கினால் கட்டுப்பணத்தை இழந்தார்’ என்பது பத்திரிகை தலையங்களாக இருந்தன. பின்னர் மார்ச் மாதம் தேர்தலுக்கு முதற்தடவையாக சைக்கிளில் எனது பிரச்சாரத்தை தொடர்ந்தேன். நான் நன்றாக செய்த 1960 யூலை தேர்தலிற்காக நண்பர் ஒருவர் எனக்கு மோட்டார் சைக்கிளொன்றைத் தந்தார். கிராமசபைக்கான 1963 உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தழிழ்காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் உள்ளுராட்சிசபையின் தலைவராக வந்தேன். மூன்று வருடகால இடைவெளியில் நான் எனது பிரச்சாரத்தை கட்டியெழுப்பினேன். இந்த குறிப்பிட்ட உள்ளுராட்சிசபை அரைவாசி வாக்காளர்களின் ஆதரவினைக்கொண்ட ஒரு நிதி வளம் நிறைந்தசபையாக விளங்கியது. மத்திய அரசாங்கத்தின் கடனுதவியின்றி மின்சாரத்தை எடுக்க முடிந்தது. பின்னர் 1970 இல் தழிழ்காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் பாராளுமன்றத்தில் நுழைந்தேன்.

அகிலன்:

லங்கா சமசமாஜக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழ்தேசியவாத அரசியலுக்குள் சென்றுள்ளீர்கள், ஏன் வெளியேறினீர்கள் என்பதை விளக்கமுடியுமா? சாதியுடனும் வர்க்க அரசியலுடனும் தமிழ்தேசியவாத அரசியலுக்கு தீர்வுகாண முடிந்ததா?

ஆனந்தசங்கரி:

தழிழ்காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் நான் வென்றபோதும் நான் லங்கா சமசமாஜக்கட்சியைச் சேர்ந்தவன் என்பதும் எனது சோசலிசப் பார்வையும் தான் எனது தேர்தல் வெற்றிக்குத் துணைபுரிந்தன. அந்தநேரத்தில் அங்கே இன்னுமொரு லங்கா சமசமாஜக்கட்சி வேட்பாளர் இருந்தார். ஆனால் லங்கா சமசமாஜக்கட்சியின் தளம் என் பின்னால் இருந்தது. எழுபதுகளின் முற்பகுதியில் செல்வநாயகத்தின் பங்காற்றலால் கோயிலுக்குள் அனுமதித்தல் போன்று சாதிக்காக குரல் கொடுத்ததால், தமிழரசுக்கட்சி சோசலிசத்தை நோக்கி நகர்ந்தது. செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதிலும் அவர்தான் கோயிலுக்குள் அனுமதித்தலை தூண்டினார். அமைச்சராக விளங்கிய ஓர் அரசியல்வாதி மாவிட்டபுரம் கோயிலுக்குள் அனுமதித்தல் பிரச்சனை தொடர்பாக செல்வநாயகத்துடன் காங்கேசன்துறையில் போட்டியிட்டார். செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர் அவருக்கு எதிராக நின்றவர் ஒரு இந்து. கோயிலுக்குள் அனுமதித்தலுக்கு எப்படி செல்வநாயகம் அறைகூவ முடியுமென அவருக்கு எதிராக நின்றவர் இந்து முழக்கம் எழுப்பினார். ஆனால் செல்வநாயகம் அந்தத் தேர்தலில் வென்றார். இது 1960 இல் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறுதான் கம்யூனிஸ்ட் இயக்கம் யாழ்ப்பாணத்தில் தோல்வியுற்றது. கம்யூனிஸ்ட்கட்சியும் லங்கா சமசமாஜக்கட்சியும் தீவிரமாக செயலாற்றி உள்ளுராட்சிசபை தேர்தலில் வெல்ல முடிந்தது. ஆனால் அவர்களால் பாராளுமன்றத்தரத்தில் வெல்ல முடியாதிருந்தது. ஏனெனில் தமிழரசுக்கட்சியினர் சோசலிச கொள்கைகளை முன்னெடுத்தனர். சோசலிசம், தமிழ்தேசியவாதம் என்ற இரண்டையும் தமிழரசுக்கட்சி என்ற ஓன்றில் கண்டிருப்பீர்கள். அதனால்தான் இடதுசாரிகளால் வெல்லமுடியவில்லை.

அகிலன்:

உதாரணமாக சாதிப்பிரச்சினைகளை முன்னெடுப்பதில் தமிழரசுக் கட்சியில் உங்களது புதிய பொறுப்பு உங்களுக்கு ஏதாவது வகையில் தடங்கலாக இருந்ததா?

ஆனந்தசங்கரி:

சாதி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. இடதுசாரிகள் நேர்மையானவர்களாகவும் ஊழலற்றவர்களாவும் இருந்தார்கள் என்பது உயர்சாதியினருக்குத் தெரிந்திருந்ததால் உள்ளுராட்சிசபைத் தரத்தில் உயர்சாதியினருக்கு இடதுசாரிகள் தேவைப்பட்டார்கள். ஏனெனில் இடதுசாரிகள் மிகவும் நேர்மையாக நிர்வாகங்களை நிர்வகித்தனர்.

1972 இல் புதிய அரசியலமைப்புச்சட்டம் கொண்டுவந்தபொழுது தமிழர்களின் ஒற்றுமைக்காக செல்வநாயகம் அழைப்பு விடுத்தார். நான் அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிராக வாக்களித்துவிட்டு தமிழர்விடுதலைக்கூட்டணியில் இணைந்தேன். புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னர்தான் தமிழர்விடுதலைக்கூட்டணியின் உருவாக்கம் சாத்தியமாக்கப்பட்டது.

அகிலன்:

தமிழ் தீவிரவாதம், இனப்பிரச்சனை மற்றும் பொதுவாக இராணுவமயமாக்கல் போன்றவற்றின் எழுச்சியால் அரசியல்வாதி என்ற உங்களது பங்களிப்பிலும் அரசியல் வேலைகளிலும் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியது?

ஆனந்தசங்கரி:

தமிழ் தேசியவாதத்தின் உச்சமாக இருந்த தமிழர்விடுதலைக்கூட்டணி உருவாக்கப்படும் வரை கட்சியில் தீவிரவாத உணர்ச்சி இருந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நான் உங்களுக்கு ஓர் உதாரணம் தரமுடியும். ஜனதா விமுக்திப் பெரமுன உறுப்பினர்கள் சரணடைந்து புனர்வாழ்விற்காக வடக்கிற்கு கொண்டுவரப்பட்டபொழுது இந்தக் குழப்பக்காரர்களை எங்கள் பகுதிக்கு கொண்டுவர வேண்டாமெனக்கூறி தமிழ் அரசுக்கட்சியிலிருந்த பலர் அதனை ஆட்சேபித்தனர். ஆனால் நான் அவர்களுக்காக வாதாடினேன். அவர்களை சமூகத்திற்கு மீளவும் கொண்டுவர வேண்டுமெனவும் அவர்களை நாங்கள் ஆதரிக்கவேண்டுமெனவும் கூறினேன். அவர்கள் அங்கே இரண்டு, மூன்று வருடங்களாக இருந்தார்கள். தமிழர்விடுதலைக்கூட்டணி உருவாக்கப்பட்டபின்னர் முதலில் துரையப்பாவின் கொலை இடம்பெற்றது பின்னர் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கியது. இதனை நான் சொல்லவேண்டும், துரையப்பா கொல்லப்பட்டபொழுது நாங்கள் எல்லோரும் மரணச்சடங்கில் கலந்துகொள்ளவேண்டுமென்று நான் தான் ஒருவன் வற்புறுத்தினேன். மற்றவர்கள் சிலர், அவர்களுக்கு கொலையில் எந்தவித சம்பந்தமில்லாமலும் ஒருவேளை இதைப்பற்றி வருத்தப்பட்டிருந்தும் கூட வேறுமாதிரி நினைத்தார்கள். பெரியவர் (செல்வநாயகம்) மிகவும் வருத்தப்பட்டு ‘‘என்னுடைய கடவுளே இது எங்கு போய் முடியப்போகின்றதோ என எனக்கு தெரியாது’’ என்று கூறினார். இது தான் அவரது முதலாவது பிரதிபலிப்பாக இருந்தது. நாங்கள் ஒருபோதும் இந்தமாதிரி கொலைகளை ஆதரித்தவர்கள் கிடையாது. நாங்கள் எல்லோரும் சென்று துரையப்பாவின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருந்தால் இது வேறுவிதமாக அமைந்திருக்கும். இது தான் தொடக்கமாக இருந்தது. காந்தியின் கொள்கையடிப்படையில் ஒர் அகிம்சை அமைப்பிற்கு கட்டுப்பட்டவர்களாக நாங்கள் இருக்க வேண்டுமென செல்வநாயகம் விரும்பினார்.

சிறுபான்மைத் தமிழர்களுடன் கலந்து சாப்படுவது என்பதைத்தான் அகிம்சை அரசியல் என கூறமுற்படுகின்றது. சாதிப்பாகுபாடு கூர்மையடைந்த இடமான பூநகரிக்கு நான் அடிக்கடி போய் சிறுபான்மைத் தமிழர்களுடன் உணவு உண்டேன் பின்னர் மற்றவர்களும் தொடர்ந்தார்கள். தலைவர் முதற்காலை எடுத்து வைத்தால் மற்றவர்களும் தொடர்வார்கள். கோயில்களும் வழிபாட்டுத்தலங்களுக்கும் வெளியே சிறுபான்மைத் தமிழர்கள் நிற்கவேண்டியிருந்தது. தேனீர்க்கடைகளில் மூக்குப்பேணி என்கின்ற தகரத்தால் செய்யப்பட்ட துருப்பிடித்த கோப்பைகள் இருந்தன. இதைத்தான் தாழ்த்தப்பட்டமக்கள் அருந்துவதற்கு பயன்படுத்தினார்கள். எனக்கு இப்போதும் நினைவிலுள்ளது. அடுத்தகட்டமாக போத்தலில் தேநீர் வழங்கி அதன் பின்னர் கண்ணாடி கிளாசாக இருந்தது. படிப்படியாக இது மாறியது, வன்முறை பயன்படுத்தப்படவில்லை, ஆனால் இது வெற்றி கண்டது.

தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக்கூட்டணியும் சோசலிசக் கொள்கையை எடுத்துக்கொண்டதால் யாழ்ப்பாணத்தில் இடதுசாரிகளால் வெல்ல முடியவில்லை. தமிழ்தேசியவாதத்துடன் சேர்ந்து இது பலமுள்ளதாக இருந்தது. ஆனாலும் மக்களிடம் குறுகிய சிந்தனைப்போக்கையும் ஏற்படுத்தியது. எனது சோசலிச அடித்தளத்தினால் நான் இப்போது சிங்களவர்களாலும் முஸ்ஸீம்களாலும் மற்றும் எனது மக்களாலும் விரும்பப்படுகின்றேன். சாதாரண மக்களுடனான எனது பின்னிப்பிணைவால் நான் நிலப்பிரவும் இல்லை.

அகிலன்:

யுத்தத்தாலும் தீவிரவாதத்தாலும் எவ்வாறு அரசியல் மாற்றமடைந்துள்ளது?

ஆனந்தசங்கரி:

நான் எப்பொழுதும் சொல்லிவருவதைப்போல் எண்பதுகளில் பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்தது நாங்கள் இழைத்த மிகப்பெரிய மோசமான பிழை. நாங்கள் கொள்கைப்பிடிப்பால் அதிகாரத்தைத் துறந்து தீவிரவாதிகள் அதனைக் கைப்பற்றுவதற்கு அனுமதித்தோம். இது ஒரு திடீர் அரசியல் புரட்சியைப் போன்றது. ஆனால் நாங்கள் மனமார்ந்து விட்டுக்கொடுத்தோம். எந்த ஓரு நாட்டு இராஜதந்திரியாவது எந்த ஓரு நாட்டிற்காவது மிக மோசமான குற்றமொன்றை செய்திருப்பாரேயாயிருந்தால் அது ஜே.ஆர்.ஜெயவர்தனாதான். அவரது ஆறாவது திருத்தச்சட்டம் எங்களை பாராளுமனறத்திற்கு வெளியே இருக்க வைத்தது. முதலில் பாராளுமனறத் தேர்தலை நடாத்துவதற்குப் பதிலாக சர்வஜன வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தும் பின்னர் ஆறாவது திருத்தச் சட்டத்தில் கூறியபடி நாங்கள் பிரிவினை ஆதரிக்கமாட்டோமெனக் கூறி நாங்கள் எல்லோரும் சத்தியப்பிரமாணம் எடுக்கவேண்டுமெனவும் தொடர்ந்தது. அதனால் நாங்கள் ஆறு வருடங்களாக பாராளுமன்றத்திற்கு வெளியே இருந்தோம். இது தமிழ் மக்களின் மோசமான ஆறு வருடங்கள். தீவிரவாதம் ஒரு குழுவாகவோ இரண்டு குழுவாகவோ இல்லாமல் நான்கு அல்லது ஐந்து குழுக்களாக காளான்கள் முளைத்தது மாதிரி வளர்ந்தது. நாங்கள் இந்த மாதிரியான ஒரு நிலைமைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. இது நடக்காமல் விட்டிருந்தால் நாங்கள் ஆறு வருடங்கள் பாராளுமன்றத்திலிருந்தால் இது இந்தளவுக்கு வந்திருக்காது.

அகிலன்:

தமிழ் தீவிரவாதத்தை அதனது ஆரம்ப காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஊக்கம் கொடுத்ததாக பெரும்பாலான ஆட்கள் கூறலாம். நீங்கள் இதனுடன் முரண்படுகின்றீர்களா?

ஆனந்தசங்கரி:

இந்தக் கேள்வி எழுப்பப்பட முன்னர் நான் உங்களுக்கு பதிலொன்று தந்துள்ளேன். துரையப்பாவைக் கொன்ற பொழுது செல்வநாயகம் என்ன சொன்னார் என்பதை நான் உங்களுக்கு கூறியுள்ளேன். துரையப்பாவின் மரணச்சடங்கில் நான் கலந்து கொண்டேன் என்பதை நான் உங்களுக்குக் கூறியிருந்தும் நீங்கள் இந்த மாதிரிக் கேள்வியொன்றை என்னிடம் எழுப்புகின்றீர்கள். எங்களது சகாக்களில் ஒருவரான அவர் கொல்லப்பட்டார். சிலவேளைகளில் எங்களது சகாக்களில் சிலர் தீவிரவாதத்தை ஊக்குவித்திருக்கலாம், ஆனால் முழுக்கட்சியினருமல்ல. ஆனால் அவர்கள் இப்போது யாருமில்லை. பழைய தலைவர்களில் நானும் சம்பந்தனும் சூசைதாசனும் அரசியலிருந்து ஒதுங்கியிருக்கின்ற கா.பொ.இரத்தினமும் தான் இருக்கின்றோம். ஏனையவர்கள் இறந்துவிட்டார்கள்.

அகிலன்:

ஏக பிரதிநிதித்துவத்திற்கு எதிராக நிலைப்பாடொன்றை எடுப்பதற்கு உங்களை தூண்டியது என்ன?

ஆனந்தசங்கரி:

என்னைப் பொறுத்தவரை நான் எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அல்ல. இது ஒரு யதார்த்தம். நாலு கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் விரும்புகிறார்களென எல்லா இடங்களிலுமுள்ள மக்கள் நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சில முக்கிய விடயங்கள் தொடர்பாக நீங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்பதற்காவது நீங்கள் ஏன் ஒன்றிணையக்கூடாது என்று சில உயர் ஸ்தானியராலயங்களும் தூதுவர்களும் உள்ளுர் ஆட்களும் கேட்டுக்கொண்டார்கள். அந்தக் கருத்திற்கு நாங்கள் ஓர் உருவாக்கம் கொடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கனோம். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஏக பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டுமென உறுப்பினர்களில் ஒருவர் விரும்பியதை எங்களில் பெரும்பாலானவர்கள் நிராகரித்திருந்தார்கள். நாங்கள் ஐந்து அம்சங்களின் அடிப்படையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டோம். ஓன்று, தடைகளை அகற்றுவது. இரண்டாவது, போக்குவரத்துத்தடை எடுக்கப்படவேண்டும். மூன்றாவது, உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் நான்கு மாதகாலமாக ஒருதலைப்பட்சமானதொரு யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்தார்கள். ஆனால் அரசாங்கம் பதில் அளிக்கவில்லை. நான்காவது, தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் ஐந்தாவது, மூன்றாம் தரப்பு மத்தியஸ்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல். ஐந்து அம்சங்கள் மாத்திரம்தான். இதில் ஏகபிரதிநிதித்துவத்தைப்பற்றி எங்கே சொல்லப்பட்டுள்ளது? நாங்கள் நியமனப்பத்திரத்தைக் கையளித்து தேர்தல் திட்ட அறிக்கையைத்தயாரித்தோம். அதே ஜந்து அம்சங்களும்தான் அதில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஏகபிரதிநிதித்துவம் என்ற அம்சத்தில் உடன்படாததிற்காகத்தான் ஆட்கள் என்னை எதிர்க்கின்றார்கள் இப்படித்தான் நான் இதனை முன்வைக்கலாம், நாளைக்கு யுத்தம் ஆரம்பித்தால் தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக யார் கதைக்கப்போகின்றார்கள்? இந்த ஆட்கள் எல்லாரும் வன்னிக்கு போகவேண்டி ஏற்ப்பட்டு அங்கு வாழவேண்டியிருக்கும். ஏகபிரதிநிதித்துவம் தமிழீழ விடுதலைப்புலிகளை மகிழ்விப்பதற்கு எனது சகாக்களில் சிலரினால் உருவாக்கப்பட்டதொன்றாக இருக்கின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை இன்று மகிழ்ச்சிக்குட்படுத்தலாம், ஆனால் தமிழ்தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை மோசமானமுறையில் கீழே கொண்டுபோய்விடும் என்பதை அவர்கள் உணரவில்லை. அவர்கள்

இதனை என்றோ ஒருநாள் உணர்வார்கள்.

அகிலன்:

பன்முகத்துவக்கட்சிகளில் வேலை செய்த உங்கள் அனுபவத்தில் கிடைத்ததை வைத்து தமிழ்அரசியலில் பன்முகத்துவக்கட்சிகளிற்கான தேவையொன்றுள்ளதென நீங்கள் சொல்வீர்களா?

ஆனந்தசங்கரி:

தமிழ்அரசியலில் சோசலிசக்கொள்கைகளை நோக்கி நகர்ந்த இரண்டு பிரதான கட்சிகளிருந்தன. வர்க்கம் என்பதை விடவும் தலைமையில் தான் வித்தியாசமிருந்தது. இரண்டு தலைவர்களான செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும் முதலாளித்துவவாதிகளாக வகைப்படுத்தலாம். எனினும் கீழ்நிலை ஊழியர்கள் மேட்டுக்குடியிலிருந்து வரவில்லை, அவர்கள் செல்வந்தர்களாகவும் இருந்ததில்லை. எப்பொழுதுமே எங்களுக்கு கட்டாயமாக இரண்டுகட்சிகள் இருக்கவேண்டும். தமிழில் ஒரு பழமொழியுள்ளது கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

அகிலன்:

தமிழ் ஜனநாயகத்திற்கான சாத்தியப்பாடுகள் என்ன? எதிர்காலத்தில் வடக்குக்கிழக்கின் ஜனநாயகத்தின் உங்களின் தூரநோக்கு எப்படியுள்ளது?

ஆனந்தசங்கரி:

இது ஒரு கடினமான கேள்வி. மத்தியில் ஜனநாயக அரசாங்கமொன்று இருக்கும் இதேவேளை வடக்குக்கிழக்கில் இன்று ஜனநாயகம் இல்லாமலுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் இல்லை. எனவே நாங்கள் அதற்க்காக கட்டாயமாகத் தயாராக வேண்டும் முழுநாட்டினையும் ஜனநாயக அமைப்பின்கீழ் கொண்டுவருவதற்கு அல்லது இதற்கான தீர்வைக்காணவேண்டும்.நீங்கள் வெளிப்படையாக பேசமுடியாது வடக்குக்கிழக்கில் நீங்கள் எவரையும் பகிரங்கமாக விமர்சிக்கமுடியாது.

அகிலன்:

உங்கள் நேரத்திற்காகவும் உங்களதுகருத்துக்களை பகிரங்கமாக பகிர்ந்து கொண்டதற்காகவும் நன்றி திரு ஆனந்தசங்கரி அவர்களே!